டெல்லியின்  திலங்பூர் கோட்லா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வினய் (28). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், நிஷா  என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நிஷா செல்போனில் யாருடனோ தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது நடத்தையில் வினய்க்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தம்பதியரிடையே கடந்த ஜூலை 2 அன்று வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற வினய், வீட்டில் இருந்த கனமான எக்ஸைடு  பேட்டரியை எடுத்து நிஷாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிஷா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததை உணர்ந்த வினய், பெரும் அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்த விஷ மாத்திரைகளை உட்கொண்டார். பின்னர், தனது 3 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு, 150 மீட்டர் தொலைவில் வசித்து வரும் தனது தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு தனது சகோதரி பிரியாவிடம், “நான் மனைவியைக் கொன்றுவிட்டு விஷம் குடித்துவிட்டேன்” எனக் கூறிவிட்டு மயங்கி விழுந்தார். இதனால் பதறிய பிரியா ஓடிச்சென்று பார்த்தபோது நிஷா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வினய்யை மீட்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரன்ஹோலா போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.