சென்னை: மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்காகவும் சிறைக்குச் செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாக முழங்கியுள்ளார்.

குடிநீருக்காகத்தான் அணை கட்டப் போகிறோம் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அப்பட்டமான பொய் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்காத அவலநிலை ஏற்படும் என்பதால், இளைஞர்கள் அனைவரும் கட்சிகளை எதிர்பார்க்காமல் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழக மக்களின் வாழ்வாதாரமே இவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், தமிழ்நாட்டில் சுயநலப்பயனுக்காக ‘பேர அரசியல்’ நடப்பது மிகுந்த அசிங்கமாக உள்ளது என்று ஆவேசப்பட்டார்.

காவிரி நீர் என்பது தமிழகத்தின் உரிமை சார்ந்த விஷயம் என்பதால், நமது எதிர்காலத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் அனைவரும் உடனடியாகப் போராட்டக் களத்திற்கு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளது தற்போதைய அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.