மகாராஷ்டிராவை உலுக்கிய சியாகோயல் விவகாரத்தை விடவும் பயங்கரமான ஒரு கொலைச் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அரங்கேறி ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஆக்ராவின் ரேணுகா தாம் காலனியைச் சேர்ந்த சுரேந்திர சர்மா மற்றும் ரூபி சர்மா தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, பிராச்சி, சித்தி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் சுரேந்திரனின் தாய் கமலாவும் வசித்து வந்தார். சுரேந்திரனுக்கு இருந்த கடுமையான மதுப்பழக்கம் காரணமாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ரூபி, கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டார். சம்பவத்தன்று தனது மகள்களையும் மாமியாரையும் திட்டமிட்டு மைத்துனரின் வீட்டுக்கு அனுப்பி வைத்த ரூபி, அன்று இரவு சுரேந்திரனுக்குப் பிடித்தமான பாயாசத்தை தயாரித்துள்ளார். ஆனால், அந்த பாயாசமே சுரேந்திரனின் உயிரைக் பறிக்கும் என அவர் நினைத்திருக்கவில்லை. பாயாசத்தில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து கணவனை ரூபி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, வீட்டின் ஹால் பகுதியை விட 3 அடி ஆழமாக இருந்த பாத்ரூம் தரைப் பகுதியை ரூபி தேர்ந்தெடுத்தார். அங்கு கணவனின் சடலத்தைப் போட்டு மூடி, அதன் மேல் மண்ணைப் பரப்பி, கொத்தனாரை வரவழைத்து சிமெண்ட் கான்கிரீட் போட்டு டைல்ஸ் ஒட்டி எவருக்கும் சந்தேகம் வராதபடி மறைத்துள்ளார். கடந்த 45 நாட்களாக இந்த கொடூரக் கொலையை எவருக்கும் தெரியாமல் ரூபி ரகசியமாகப் பாதுகாத்து வந்தார். ஆனால், கடந்த 2017-ல் சுரேந்திரன் மீது இருந்த ஒரு லாரி திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த போலீஸார் திடீரென ரூபியின் வீட்டிற்கு வந்தனர்.
சுரேந்திரன் எங்கே என விசாரித்ததோடு, ரூபியை போலீஸார் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் தனது கொலைக் குட்டு உடைந்துவிட்டதோ என பயந்துபோன ரூபி, உடனடியாக தனது மைத்துனர் அனில் சர்மாவை வரவழைத்து, கணவனைக் கொன்று பாத்ரூமில் புதைத்த உண்மையை உளறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அனில் போலீசாருக்குத் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பாத்ரூம் தரையைத் தோண்டி சுரேந்திரனின் அழுகிய சடலத்தைக் கைப்பற்றி ரூபியைக் கைது செய்தனர்.
