உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா, தனது அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
மேலும் அப்போது அவருடைய மொபைல் போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதை அவர் எடுத்துப் பேசியபோது, எதிர்முனையில் இருந்து ஒரு பெண் பேசியுள்ளார். அந்தப் பெண், “ஹலோ சார், நான் தவறுதலாக உங்களுடைய போன் நம்பருக்கு ₹299 ரீசார்ஜ் செய்துவிட்டேன், தயவுசெய்து அந்தப் பணத்தை எனக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று மிகவும் சாதாரணமாகக் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தான் ஒரு மாவட்டத்தின் உயர்தர காவல் அதிகாரி என்பதைப் பொறுமையாக எடுத்துரைத்த சஞ்சய் குமார், தவறுதலாக ரீசார்ஜ் செய்த அந்தப் பெண்ணிற்கு உதவ முன்வந்தார். உடனடியாக அந்தப் பெண்ணின் கூகுள் பே எண்ணைப் பெற்று, அவரிடமிருந்து தவறுதலாக வந்த ₹299 தொகையைத் தனது சொந்தப் பணத்திலிருந்து அந்தப் பெண்ணிற்குத் திரும்ப அனுப்பினார்.
இதனால் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், ஒரு உயர்பதவியில் இருக்கும் காவல் அதிகாரி எவ்வித அலட்சியமும் காட்டாமல், ஒரு பெண்ணின் சிறிய தொகைக்காக உடனே போன் காலில் பேசி பணத்தைத் திருப்பித் தந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
