தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்று நினைத்து நாங்கள் பிரசாரத்தில் ஈடுபட்டோம். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கத்தை நாங்கள் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டோம். அதன் விளைவாகத்தான் இன்று அவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்” என்று மிகவும் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சினிமா மோகத்தின் காரணமாக இளைஞர்களும், குழந்தைகளும் தங்களது பெற்றோரை வற்புறுத்தி தவெக-விற்கு வாக்களிக்க வைத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். இந்தச் சூழலை மாற்றியமைக்க, தமிழகத்தின் மாவட்டந்தோறும் உள்ள அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்த காலங்களில் அதிமுக அரசு மக்களுக்குத் தந்த பல்வேறு நற்காரியங்களையும், திட்டங்களையும் புதிய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். கட்சியை வலுப்படுத்துவதற்காகத் தொடர்ந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மிக விரைவில் மக்களை நேரில் சந்தித்துப் பிரசாரம் செய்யப் போவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
