சமூக வலைதளத்தில் பெண் என்று நம்பி ஒருவரை காதலித்து வந்த 20 வயது இளைஞர், அவர் ஒரு ஆண் என்று தெரிந்ததும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஷா மற்றும் பூனம் என்ற பெயரில் முகநூல், இன்ஸ்டாகிராமில் பெண்களாகப் பழகி வந்த சந்தன் குமார் என்பவரை, பியூஷ் குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒருநாள் சந்தன் குமார் ஷேவிங் செய்வதைப் பார்த்த பியூஷ், அவர் பெண் அல்ல, ஆண் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அவர்கள் ராஜ்கோட் வரை சென்றடைந்தனர்.

ஜூன் 21-ம் தேதி, இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பியூஷ் தனது காதலனை ரயில் தண்டவாளம் அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, பெரிய கற்களால் தாக்கி கொலை செய்துள்ளார். உடலை மறைத்து வைத்துவிட்டு மீண்டும் வேலைக்குச் சென்ற அவர், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தொடக்கத்தில் விபத்து என கருதப்பட்ட இந்தச் சம்பவம், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு கொலை என உறுதி செய்யப்பட்டது. தற்போது, பியூஷ் குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளக் காதலில் மறைந்துள்ள ஆபத்துகளைப் பலருக்கும் உணர்த்தியுள்ளது.