தாய்லாந்தில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை தருவதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல இளைஞர்களை ஆசை வார்த்தை காட்டி தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதம் 70,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று நம்பிச் சென்ற நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாராஷ்டிர இளைஞர்கள் அங்குள்ள ஆயுதமேந்திய கும்பலிடம் சிக்கியுள்ளனர்.

அங்கு அவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, தினமும் 18 மணி நேரம் ஆன்லைன் மோசடி வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் அனைவரும் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு, தூக்கமின்றித் தவித்து வருவதைக் கண்டு, மகாராஷ்டிர அரசு உடனடியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இது குறித்து அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து, சிக்கியுள்ள இளைஞர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நம்பிச் செல்லும் இளைஞர்கள், ஆன்லைன் விளம்பரங்களை மட்டும் நம்பாமல், நிறுவனத்தின் பின்னணியை முறையாகச் சரிபார்க்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.