சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் இந்தியாவிற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தராரோடு இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய முசாதிக் மாலிக், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்குரிய தண்ணீரின் மீது உரிமை கோரவோ அல்லது அதைத் தடுக்கவோ முயற்சிக்கும் ‘கைகளை வெட்டுவோம்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும், மேல்மட்டத்தில் வாழும் மக்கள் சரிவான பகுதியில் வாழ்பவர்களின் தண்ணீரை நிறுத்த உலக நாடுகள் உரிமை தந்துவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த அறிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொள்ள முயல்கிறது. ஆனால், உண்மையில் இந்தியா சிந்து நதியின் ஒட்டுமொத்த நீரையும் தடுக்கவில்லை; சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் இப்போதும் பாகிஸ்தானை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. மாறாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அமைப்பை மட்டுமே இந்தியா தற்போது நிறுத்தியுள்ளது.

கடந்த 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தால் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் நீர் மேலாண்மை மற்றும் அணைத் திட்டங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தகவல்களைப் பகிர்ந்து வந்தன. தற்போது அந்தத் தொடர்பு ஆதரவை இந்தியா முடக்கியுள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.