உலகெங்கிலும் பொதுவாக மரணத்திற்குப் பின் சில நாட்களுக்குள் இறுதிச்சடங்குகள் முடிக்கப்படும் நிலையில், சில வரலாற்றுத் தலைவர்களின் உடல்கள் பல காலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 1924-ல் மறைந்த ரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனினின் உடல், சுமார் 102 ஆண்டுகளாக மாஸ்கோவில் உள்ள லெனின் கல்லறையில் பதப்படுத்தப்பட்டு இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், சமீபத்தில் மறைந்த ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா கொமேனி, போர் சூழல் காரணமாக 116 நாட்கள் மறைவான இடத்தில் பாதுகாக்கப்பட்ட பிறகு, தற்போது ஜூலை 9-ம் தேதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளார்.
லெனினின் உடல் பல தசாப்தங்களாகச் சிதையாமல் இருப்பதற்கு சோவியத் விஞ்ஞானிகள் பயன்படுத்திய மேம்பட்ட ரசாயனத் தொழில்நுட்பமே காரணம். அவரது உடலில் உள்ள ரத்தம் மற்றும் திரவங்களுக்குப் பதிலாகச் சிறப்பு ரசாயனக் கரைசல்கள் செலுத்தப்பட்டு, தொடர்ந்து 18 மாதங்களுக்கு ஒருமுறை உடல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
உடல் வைக்கப்பட்டுள்ள அறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நவீனத் தொழில்நுட்பத்தால் மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், அது இன்னும் நிறைவேறாமல் ரஷ்யாவின் முக்கிய வரலாற்றுச் சுற்றுலாத் தலமாகவே தொடர்ந்து வருகிறது.
