தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயது இளம்பெண் ஒருவரை வெளிநாட்டு நபர் கொடூரமாக கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து வீசிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலாசின் மாகாணத்தைச் சேர்ந்த கேக் (வயது 17) என்ற சிறுமி கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு முதல் காணாமல் போனதாக அவளது தோழர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் பட்டாயா போலீசார் ஜோம்டியன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சிறுமி சைமன் பீட்டர் கார்மென் (வயது 46) என்ற ஆஸ்திரேலிய நபருடன் 15-வது மாடிக்குச் செல்வதும், பின்னர் 15 மணி நேரம் கழித்து அந்த நபர் ஒரு பெரிய கருப்பு நிற சூட்கேஸை இழுத்துக் கொண்டு வெளியேறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

​இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், பட்டாயா மிதக்கும் சந்தைக்குப் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் வீசப்பட்டிருந்த சூட்கேசிற்குள் இருந்து அந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இதற்கிடையில், சுவர்ணபூமி விமான நிலையம் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு தப்ப முயன்ற கொலையாளி சைமனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது அவனது உடல் முழுவதும் நகக்கீரல்கள் இருந்தன.

தான் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் கொலையாளி குற்றத்தை மறுத்து நாடகமாடினாலும், பட்டாயா நீதிமன்றம் அவன் மீது சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.