தனது முன்னாள் காதலியின் அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் உள்ள ஆபாசக் குழுவில் பகிர்ந்து, அவரை அவமானப்படுத்திய சிங்கப்பூரைச் சேர்ந்த அப்துல் மர்சூக் வலியுடின் அப்துல் மஜித் (27) என்ற வாலிபருக்கு, இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் வழங்கி நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பழக்கத்தால், காதலித்த அந்தப் பெண், வாலிபரின் அதீத பொறாமை மற்றும் ஆதிக்கக் குணத்தால் பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் மர்சூக், தான் மன்னிப்பு கேட்க முயன்றபோது தன்னை பிளாக் செய்த காதலியைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக சுமார் 80,000 உறுப்பினர்களைக் கொண்ட, மத உடையில் இருக்கும் பெண்களின் ஆபாசப் படங்களைப் பகிரும் ஒரு குறிப்பிட்ட டெலிகிராம் குழுவில், பாதிக்கப்பட்ட பெண்ணின் முழுப் பெயர் மற்றும் முகநூல் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவரைப் போன்றே ஆள்மாறாட்டம் செய்து அந்தரங்கப் படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

தனது அந்தரங்கப் படங்கள் இணையத்தில் பரவுவதை ஒரு மர்ம நபர் மூலம் அறிந்த அந்தப் பெண், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான போதிலும், துணிச்சலாக ஒரு போலி கணக்கை உருவாக்கி அந்த ரகசிய ஆபாசக் குழுவிற்குள் ஊடுருவியுள்ளார். அங்குத் தனக்கு எதிராகப் பகிரப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் திரட்டியதோடு, அந்தக் குழுவின் பின்னணியில் தனது முன்னாள் காதலன் அப்துல் மர்சூக் இருப்பதை உறுதி செய்து சிங்கப்பூர் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். பெண்ணின் துணிச்சலான இந்த ரகசிய விசாரணையால் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அந்தப் பெரிய ஆபாசக் குழுவை போலீசார் முற்றிலுமாக முடக்கினர்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண், மன உளைச்சல் தாங்காமல் தற்கொலைக்கு முயன்றதோடு, தனது மதப் போதகர் ஆகும் கனவையும் கைவிட்டு, சொந்தத் தாயாலும் கைவிடப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பெரும் துயரத்தைச் சந்தித்து வந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி தோ ஹான் லி, வாலிபரின் செயல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரப் பழிவாங்கல் நடவடிக்கை எனக் கூறி, சிறைத் தண்டனையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் 2.5 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.