சென்னை பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்த, சமீபத்தில் நடந்த 12-ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்து மீண்டும் தேர்வு எழுதப் படித்து வந்த 17 வயதுப் பச்சிளம் சிறுமி ஒருவர், நண்பர்கள் என்று நம்பிய சில காம மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. குன்றத்தூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தனது நண்பனைப் பார்ப்பதற்காக அந்தச் சிறுமி சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நண்பன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அந்தச் சிறுமியை ஏமாற்றிப் போரூர் அருகே கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வெறிச்சோடிய காலி இடத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளார். பின்னர், தனது நண்பர்கள் சிலரையும் அங்கு வரவழைத்து, அந்தச் சிறுமியைச் சீரழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

நேற்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டிற்கு வந்த அந்தச் சிறுமி, பெற்றோர் விசாரித்தபோது தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைச் சொல்லிக் கதறி அழுதுள்ளார். இதனால் நிலை குலைந்து போன பெற்றோர், போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய மின்னல் வேக விசாரணையில், காலடிபேட்டையைச் சேர்ந்த சிறுமியின் நண்பன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் அதிரடியாகப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட சிறுமியுடன் வந்த மற்றொரு தோழி, அவரோடு செல்லாமல் வீட்டிற்குச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக இந்த ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். இந்த அராஜக வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.