வியாபாரி ஒருவர் தனது வண்டியில் வெள்ளரிக்காய்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த போது, அவ்வழியாக யானைகள் ஆட்களின் மேற்பார்வையில் வரிசையாக அணிவகுத்துச் சென்றன. அப்போது அங்கிருந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு குட்டி யானை, திடீரென வியாபாரியின் வண்டியை நோக்கி நேராக வந்தது.

அந்த வண்டியில் இருந்த ஒட்டுமொத்த வெள்ளரிக்காயயும், ஏன் அந்த வண்டியையே தலைகீழாகக் கவிழ்த்து ஒட்டுமொத்தத்தையும் ஒரே நொடியில் பிடுங்கி உண்ணும் அசாத்திய பலமும் ஆற்றலும் அந்தச் சின்னஞ்சிறு குட்டி யானைக்கு இருந்த போதிலும், அது தன்பலத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை. திடீரென வண்டியை நோக்கி யானை வந்ததால் வியாபாரி பயந்து நடுங்கி, என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றார்.

ஆனால், அந்த வியாபாரியின் பயத்தைப் புரிந்து கொண்டது போல, அந்த குட்டி யானை வண்டியில் இருந்த வெள்ளரிக்காய்களை ஒட்டுமொத்தமாக அள்ளாமல், மிக மெதுவாகவும், லாவகமாகவும் ஒரே ஒரு வெள்ளரிக்காயை மட்டும் தும்பிக்கையால் எடுத்து மிகுந்த திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தது.

“>

மனிதர்களாகிய நாமே பல நேரங்களில் பேராசையால் அவதிப்படும் நிலையில், தன்னிடம் இருக்கும் அபாரமான ஆற்றலைக் காட்டாமல், மிகுந்த பெருந்தன்மையோடும் பக்குவத்தோடும் தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு நகர்ந்த அந்த குட்டி யானையின் செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.