கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். கோவாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வடக்கு கோவாவில் உள்ள பாகா கடற்கரைக்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது, சஹாஸ் அஷ்பக் மசாலி கடலில் இறங்கி உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகப் பயங்கர வேகத்துடன் வந்த ஒரு ராட்சத அலை, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் அவர் அலையின் சீற்றத்தில் சிக்கித் தண்ணீரில் மூழ்கியதால், கரையில் இருந்த அவரது நண்பர்கள் அலறியடித்துக் கூச்சலிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோரக் காவல் படையினர் மற்றும் உயிர்காக்கும் காவலர்கள் , கடலில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி சஹாஸ் அஷ்பக் மசாலியை மீட்டனர். எனினும், அவர் ஏற்கனவே அதிகளவில் தண்ணீரை குடித்திருந்ததால் மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோவா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சுற்றுலா சென்ற இடத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.