உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தையும் பொதுமக்களிடையே கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், திறந்தவெளிப் பகுதி ஒன்றில் இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு அருகில், தேங்கிப் போய் முடைநாற்றம் வீசும் சேறு கலந்த குட்டையான குளத்து நீரில், நபர் ஒருவர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிக்கட்டுகளை முக்கி முக்கி அலசி எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
நமக்கு வரும் காய்கறிகள் எவ்வளவு மோசமான சூழலில் சுத்தப்படுத்தப்படுகின்றன என்பதை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து வீடியோ எடுத்த நபர், “நொய்டா மக்களே.. பாருங்கள், நீங்கள் சத்து நிறைந்தது என்று ஆசையாக வாங்கிச் சாப்பிடும் பச்சைக் காய்கறிகள் எவ்வளவு ‘சுத்தமான’ தண்ணீரில் கழுவப்படுகின்றன!” என்று ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். ஆனால், அதைப் பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் அந்தத் தவறைச் செய்த நபர் கேமராவைப் பார்த்து நக்கலாகச் சிரிப்பது நெட்டிசன்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
நொய்டா பார்த்தலா பாலத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறி இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இந்தத் துரோகத்தைச் செய்த நபரை உடனடியாகக் கண்டறிந்து போலீஸார் கடுமையான சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்றும், காய்கறிகளைச் சமைப்பதற்கு முன்பு மக்கள் பலமுறை நன்கு கழுவிப் பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
