கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில், இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் போரின்போது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்திருந்த இந்த ஆலையை, போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் இயக்குவதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டபோது இந்த எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டு ஆலை முழுவதும் தீப்பற்றியது.

இதில் உயிரிழந்த 13 பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 66 பேரில் இந்தியா, கத்தார், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர்.

கத்தாரின் உள்நாட்டு மின்சார உற்பத்திக்கும், கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளுக்கும் முதன்மை ஆதாரமாக விளங்கும் இந்த ஆலையின் தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இத்துயரச் சம்பவத்திற்கு தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.