தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று குன்னூரில் கோயில் நிதியைக் கொண்டு மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் புதிய அமைச்சர் ரமேஷ் இடையே காரசார விவாதம் அரங்கேறியது. இந்தத் திட்டத்தை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தான் கொண்டு வந்தார் என்பதும், அது மக்களுக்கு நல்லது என்ற ரீதியில்தான் அவர் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விளக்கமளித்த புதிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது என்ற விளக்கத்தைக் கேட்டதோடு, முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் இந்த ஆட்சியிலும் தொய்வின்றித் தொடரும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். ​அதே சமயம், தாங்கள் யாருக்கும் பி-டீமாக இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் தனது பேச்சில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

இவர்களுக்கு இடையே கோயில் வருவாயைப் பயன்படுத்துவது குறித்து விவாதம் நீடித்த நிலையில், இதில் தலையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கார் பார்க்கிங்கும் ஒரு அத்தியாவசியத் தேவைதான் என்றும், அதை கோயில் நிதியைக் கொண்டு செய்வதில் தவறில்லை என்றும் கூறி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டத்திற்குத் தனது ஆதரவைப் பதிவு செய்தார்.