தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்த நாளை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்-அமைச்சரின் தந்தையும், பிரபல திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குழந்தைகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம், “தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மக்கள் பிரச்சினைகள் குறித்து வாய் திறந்து பேச வேண்டும் என்று தி.மு.க.வினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர் கடந்த 60 ஆண்டுகளாக இங்கே பேசி பேசியே நாட்டை கெடுத்துவிட்டார்கள். வெற்றுப் பேச்சுக்களை விட, மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதே மிக முக்கியம். அதைத்தான் தற்போதைய முதல்-அமைச்சர் செய்து வருகிறார் என்றார்.

அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.