2001 மற்றும் 2006 காலகட்டத் தேர்தல்களில் மூப்பனார், கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இருந்த கூட்டணிக் கணக்குகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துத் தொல். திருமாவளவன் மேடையில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கலைஞரிடம் விசிகவுக்கு இடம் கேட்டபோது, ‘கூட்டணியில் இடமில்லை, பாமக வேண்டுமானால் தன் தொகுதியில் பிரித்துக் கொடுக்கட்டும்’ என கலைஞர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தாங்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்து காட்டுமன்னார்குடி மற்றும் திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதாக பழைய வரலாற்றை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், கூட்டணி அமைத்த ஆறே மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுகவோடு முரண் ஏற்பட்டு விசிக வெளியே வந்ததாகக் குறிப்பிட்ட திருமாவளவன், அப்போது ஜெயலலிதா அம்மையார் தங்களைக் கடுமையாக விமர்சிப்பார் என்று பலரும் எதிர்பார்த்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு மாறாக, மிகுந்த பெருந்தன்மையோடு, ‘தம்பி திருமாவளவன் அரசியலில் அவசரப்படக்கூடாது, எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அவர் வாழ்த்தியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதன் பிறகு 5 ஆண்டு காலம் திமுக அரசு நீடிப்பதற்கு விசிகவின் 2 எம்எல்ஏக்கள் தான் ஆதரவு தந்தோம் என்றும் பழைய அரசியல் திருப்பங்களை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
