மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் மூன்று முக்கிய வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான ‘டெபிட்’ பரிவர்த்தனைகளை போலீஸார் அதிரடியாக முடக்கியுள்ளனர். கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர், பிதான்நகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ரூ.440 கோடி பணம், முறைகேடான வழிகளிலும் பொதுப் பணத்தை திசைதிருப்பியும் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது புகாரில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதையடுத்து, இந்த நிதி ஆதாரங்களின் பின்னணி குறித்து போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிதி கணக்கு முடக்கத்திற்கு முன்னதாக, கட்சியின் முன்னாள் பொருளாளரான அரூப் பிஸ்வாஸ், தலைமைப் போட்டி நிலவுவதால் கட்சியின் ரூ.500 கோடிக்கும் அதிகமான டெபாசிட் தொகையைப் பாதுகாக்க பரிவர்த்தனைகளை நிறுத்தக் கோரி வங்கிக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், மம்தா பானர்ஜிக்கு ஆதரவான குனல் கோஷ் எம்.எல்.ஏ. போன்ற நிர்வாகிகள், அரூப் பிஸ்வாஸ் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறி இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள இந்த கடும் நிதி மற்றும் அதிகாரப் போட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு மிகப்பெரிய சட்டப் போராட்டத்தையும் அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.