காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையினுள் அரசியல் ரீதியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் ராஜேஷ், கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். உத்திரமேரூர் அருகேயுள்ள தளவாரம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள், தவெக ஒன்றிய செயலாளரான ராஜேஷ் தமிழக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்துடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

கல்வி கற்கும் புனிதமான அரசுப் பள்ளி வளாகத்திற்குள் இப்படி அரசியல் லாபத்திற்காக வீடியோ எடுத்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியது. ​இது குறித்து தவெக கட்சித் தலைமைக்கு அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பொதுமக்களுக்கு இடையூறாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவெக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தென்னரசு, ராஜேஷை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். தவெக ஆட்சி அமைந்த பிறகு தங்களது கட்சி நிர்வாகி ஒருவர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.