மாலை நேரங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு நொறுக்குத் தீனியாக சமோசா இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில், சமோசாவின் சுவை மற்றும் மொறுமொறுப்புக்காக மக்கள் அதனை தேடித் தேடி வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், மக்களின் இந்த பேராசையையும், விருப்பத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில வியாபாரிகள், அதில் ஆபத்தான ரசாயனங்களை கலந்து விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி, சமோசா பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வைரல் காணொளியில், நபர் ஒருவர் சமோசாக்கள் பார்ப்பதற்கு மிகவும் மொறுமொறுப்பாகவும், நல்ல நிறத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, அதன் மீது ரசாயனம் கலந்த வண்ணத்தை ஸ்பிரே செய்து அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

நாம் அன்றாடம் ஆசையாக வாங்கி உண்ணும் உணவில், இப்படி ஒரு ஆபத்தான ரசாயனக் கலவை சேர்க்கப்படுவதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கலப்படத்தின் உச்சகட்டமாக விளங்கும் இந்த செயல், உணவு பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.