தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மல்காஜ்கிரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தகராறில், முஸ்லிம் சிறுவன் ஒருவனைப் பார்த்து மற்றொரு நபர் “பாகிஸ்தானி” என்று அழைத்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு தொடர்பான ஒரு சாதாரண வாக்குவாதத்தின் போது, ஒரு சிறுவன் என்றும் பாராமல் அவனது தேச அடையாளத்தை தவறாகச் சித்தரித்து அசிங்கப்படுத்திய நபருக்கு, அந்த சிறுவன் உணர்ச்சிப்பூர்வமாக பதிலடி கொடுக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
அந்தக் காணொளியில், அந்த சிறுவன் மிகுந்த ஆவேசத்துடனும் கண்ணீருடனும், “என்னை பாகிஸ்தானினு சொல்லாதீங்க, நான் இந்தியன்!” என்று முகத்திற்கு நேராக முழங்கியுள்ளான். மேலும், தனது தாத்தா இந்திய ராணுவத்தில் நாட்டுக்காக சேவை செய்தவர் என்றும், இந்த நாட்டின் மீது தனது குடும்பத்திற்கு இருக்கும் பற்று மற்றும் பிணைப்பு குறித்து தான் பெருமைப்படுவதாகவும் உணர்ச்சிப்பொங்க தெரிவித்துள்ளான். பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பது போல் ஒரு சிறுவனின் தேசப்பற்றை இழுத்து பேசுவது அநாகரிகமானது என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
