திமுக கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் விலகியது குறித்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்தத் தேர்தல் தங்களுக்கு யார் உண்மையான நண்பர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லீம் லீக் கட்சி தவெக அமைச்சரவையில் இணைந்துவிட்டதால், அவர்கள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இதே போன்ற முடிவை மதிமுகவும் எடுக்கும் என்று கூறிய அவர், கூட்டணி கட்சிகள் பதவி ஆசைக்காகவே வெளியேறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்த ஆர்.எஸ். பாரதி, சில கட்சிகள் பதவி ஆசையினால் தங்களை விட்டுப் பிரிந்து பலியாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு முன்பே இந்தக் கட்சிகள் வெளியேறியிருந்தால், திமுக கூடுதல் இடங்களில் போட்டியிட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஊடகங்களின் கணிப்பில் விஜய் ஆட்சி அமைப்பார் என்று எங்கும் சொல்லப்படவில்லை என்றும், வரும் காலங்களில் தேர்தல் முடிவுகளின் உண்மைத்தன்மை புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
