தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்களின் கரங்களை வலுப்படுத்தப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக-வின் முக்கிய தூண்களாக விளங்கும் அமைச்சர் ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் ஆகியோரின் முன்னிலையில் தான் தவெக-வில் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.

​தவெக-வில் இணைவது குறித்துப் பேசிய அவர், “என்னை கட்சியில் இணைவதற்கு வருகிறீர்களா என்று கேட்டார்கள், நாம் பிரிந்திருந்தால் தானே மீண்டும் இணைவதற்கு? நான் ஏற்கனவே லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதே ‘தமிழகத்தின் நாளைய தீர்ப்பு’ என்று பிரகடனப்படுத்தி இருந்தேன்” என்று சுட்டிக்காட்டினார்.

தற்போது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சி நடந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முதலமைச்சர் விஜய் அவர்களின் கரங்களை எப்போதும் வலுப்படுத்துவேன் என்றும் தவெக-வில் இணைந்த பின் மன்சூர் அலிகான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.