பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அபய் குமார் என்ற இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் 1 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது மனைவியை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவளுக்கு வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருப்பது அபய்க்கு தெரியவந்துள்ளது.
அந்த இளைஞரைத் தனது உறவினர் என்று கூறி மனைவி ஏமாற்றி வந்த நிலையில், கடந்த வாரம் அவள் தனது தாய் வீட்டுக்குச் சென்ற பிறகு அபய்யின் மொபைல் போனுக்கு மனைவியும் அவளது காதலனும் நெருக்கமாக இருக்கும் சில ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களும், வீடியோக்களும் வந்துள்ளன.
இதனால் கடும் அதிர்ச்சியும் மன அழுத்தமும் அடைந்த அபய், செவ்வாய்க்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறி விபரீத முடிவை தேடிக்கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் போலீசாரும் உடலைக் கைப்பற்றியதுடன், அங்கு அபய் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தையும் மீட்டனர்.
அதில், “என் மனைவி வேறொருவனுடன் கள்ள உறவில் இருக்கிறார், இதனால் நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்; என் மரணத்திற்கு அவளே காரணம், என் குடும்பத்தினரே என்னை மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து காந்தி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
