உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கீரியில், காவல் நிலையத்தின் பாதுகாப்பு அறையில் (Store room) வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றுவிட்டதாகப் போலீஸார் நீதிமன்றத்தில் விசித்திரமான விளக்கமளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது உடலில் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுப் போலீஸ் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது கணவர் முதித் அகர்வால், தங்களது குடும்ப நகைகளைத் திரும்பக் கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதற்குப் போலீஸார் அளித்த பதிலில்தான் இந்த ‘குரங்கு’ கதை அரங்கேறியுள்ளது. “பலத்த மழையால் நகைகள் நனைந்துவிட்டன; அப்போது டி.ஐ.ஜி (DIG) ஆய்வுக்கு வரவிருந்ததால், நகைகளைக் காய வைப்பதற்காக மொட்டை மாடியில் வைத்திருந்தோம்; அப்போது வந்த குரங்குகள் நகைகளைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டன” என்று 2013-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு விசித்திரமான ஆவணத்தைப் போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதைக் கேட்டு கடும் கோபமடைந்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய கோடிக்கணக்கான நகைகளை எப்படி மொட்டை மாடியில் காய வைக்கலாம் என்று போலீஸாரைக் கடுமையாக வறுத்தெடுத்ததோடு, இந்தக் குரங்கு கதை முற்றிலும் பொய் எனக்கூறி தள்ளுபடி செய்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், பாதிக்கப்பட்ட முதித் அகர்வாலுக்கு நகைகளுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
