மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி அனிகா சர்மா, ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ என்ற அரிய மற்றும் கடுமையான தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்நோயைக் குணப்படுத்த சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறப்பு ஊசி தேவைப்படுகிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள அனிகாவின் பெற்றோர், கடந்த எட்டு மாதங்களாகப் பொதுமக்களிடம் நிதி திரட்டி சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை சேர்த்துள்ளனர்.
எனினும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கும், மீதமுள்ள 1 முதல் 1.5 கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதற்கும் உதவி கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், இந்தச் சிகிச்சையை மேற்கொள்வதற்குச் சிறுமியின் எடை 13 கிலோவிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதால், பெற்றோர் அவளுக்குத் திரவ உணவுகளை மட்டுமே வழங்கி எடையைக் கட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிக முக்கியமான கேள்வி ஒன்றையும், உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இதனால் மத்தியப் பிரதேச அரசின் போன்ற திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் நிலையில், “இந்தச் சிறுமி மட்டும் மாநிலத்தின் ‘லாட்லி’ இல்லையா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இரு அரசுகளும் ஒருங்கிணைந்து அனிகாவின் சிகிச்சைக்குத் தேவையான மீதமுள்ள தொகையை வழங்கிட அனைத்து சாத்தியமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்த்துள்ள நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதுடன், சிறுமியின் உயிரைக் காக்க அரசுகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
