இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளருமான சி. மகேந்திரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தவெக-வின் அடிப்படை உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சி. மகேந்திரன் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி. மகேந்திரன் பேசுகையில், தவெக-வின் தேர்தல் வெற்றியானது சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற அனைத்து பாகுபாடுகளையும் உடைத்தெறிந்து சாதியைத் தோற்கடித்துள்ளதாகத் தெரிவித்தார். அரசியலில் சாதி தோற்கடிக்கப்பட்டிருப்பதை தாம் வியப்புடன் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ளதாகவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தாம் தவெக-வில் இணைந்துள்ளதாகவும் விளக்கினார். மேலும், தனது அடையாளமான சிவப்பு துண்டோடு தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர்ந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.