திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்) கீழ் பெண்கள் சிலர் ஏரிக்கரை பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான மதுபோதையில் அங்கு வந்து, வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் வம்பு இழுத்து, அநாகரீகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், அந்த நபரின் செயலைக் கண்டித்து தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, பெண்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களைப் பழிவாங்கவும் திட்டமிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்ற அந்த நபர், ஒரு கேனில் பெட்ரோல் எடுத்துக்கொண்டு மீண்டும் ஏரிக்கரைக்கு வந்துள்ளார். தட்டி கேட்ட பெண்களின் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி, தீ வைக்க முயன்று கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் சுதாரித்துக் கொண்ட அங்கிருந்த சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார், அந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.