அவசர அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்றைய தினமே, மேலாளர் தன்னை வேலைக்கு வருமாறு வற்புறுத்தியதாக ஊழியர் ஒருவர் ரெட்டிட் (Reddit) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களுக்கு மார்க்கெட்டிங் செய்யும் துறையில் பணிபுரியும் அந்த ஊழியர், கடந்த ஓராண்டாக தான் ஒரு நாள் கூட முழுமையாக விடுப்பு எடுக்காமல் வார இறுதி நாட்கள், நள்ளிரவு என எப்போதும் ஆன்-காலில் வேலை பார்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரின் இடமாற்றம் மற்றும் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தனது ரெசுமேவில் (Resume) வேலை இடைவெளி (Gaps) இருந்ததால், இந்த வேலையைத் தக்கவைக்க வரிக்குப் பிறகு வெறும் 13 டாலர் சொற்ப சம்பளத்திலும் அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு உழைத்து வந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்றும், முக்கியக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளுமாறு அவரது பாஸ் கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியின்றி அவரும் ஆபரேஷன் நடந்த அன்றே மீட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

Comment
byu/Individual_Star_2053 from discussion
injobs

ஆனால், அதன் பின்னரும் அவரது மேலாளர் தொடர்ந்து அதிக வேலைப்பளுவைக் கொடுத்து டார்ச்சர் செய்வதால், தான் செய்வதறியாது தவிப்பதாக அந்த ஊழியர் பதிவிட்டுள்ளார். இந்தத் துயரமான பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் இத்தகைய மோசமான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகக் கொதித்தெழுந்துள்ளனர். உடல்நலனை விட வேலை முக்கியமல்ல என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் கடிதம் பெற்று மனிதவள மேம்பாட்டுத் துறையை அணுகி விடுப்பு எடுக்குமாறும், இந்த அடிமைத்தனமான வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுமாறும் அந்த ஊழியருக்குப் பலரும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.