தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், தனது கட்சிக்காக ‘வெற்றி’ (VETRI) என்ற பெயரில் புதிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியுள்ளார். திமுக, அதிமுக போன்ற முன்னணி அரசியல் கட்சிகளுக்குப் பின்னணியில் ஊடகங்கள் இருப்பதைப் போல, தவெக அரசின் புதிய திட்டங்களையும் முதலமைச்சர் விஜய்யின் மக்கள் நலப் பணிகளையும் தொய்வின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த அதிகாரப்பூர்வ ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரைத் துறையில் இதற்கான விண்ணப்பம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, தற்போது தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் தேர்வு செய்யும் ஆரம்பகட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ​தவெக-வின் இந்த புதிய தொலைக்காட்சித் தொடக்கத்திற்கு, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஊடக உலகில் வலது கால் எடுத்து வைத்துத் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கும் வெற்றி தொலைக்காட்சி, வெற்றியைத் தவிர வேறு எதையும் பெறாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், சமூகத்தில் சுக துக்கங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறிவிட்ட சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எய்யப்படும் அவதூறு அம்புகளைப் பிடுங்கி எறியும் முக்கியக் கடமையை இந்த வெற்றி தொலைக்காட்சி செவ்வனே செய்யும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மிக ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.