தம்புள்ளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி சூப்பர் ஓவரில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணியின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்திலேயே தனது நிதானத்தை இழந்து ஸ்ரீலங்கா வீரர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டியின் கடைசி தருணத்தில் ஏற்பட்ட சில சர்ச்சைக்குரிய முடிவுகளால் இரு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த வைபவ் சூர்யவன்ஷி, எதிரணி வீரர்களை நோக்கிப் பாய்ந்த நிலையில், சக இந்திய வீரரான சூர்யான்ஷ் ஷெட்ஜ் அவரைத் தடுத்து நிறுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த பரபரப்பான மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலுக்கு முன்பாக, இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் திலக் வர்மாவும் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட நேரம் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். போட்டியின் கடைசி பந்தில் ஸ்ரீலங்கா அணி பேட்ஸ்மேன் ஷாட் ஆட முயற்சி செய்யாத போதும், நடுவர்கள் அதற்கு ‘லெக்-பை’ ரன் வழங்கியதால் ஆட்டம் சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.
Another heated moment between Vaibhav Sooryvanshi and Sri Lankan players. 🥶 https://t.co/iwmOQfMZwv pic.twitter.com/cUINMCFuJ5
— Qamar. (@Qamar5618) June 15, 2026
மேலும், போதிய வெளிச்சம் இல்லாத சூழலில் சூப்பர் ஓவர் நடத்த நடுவர்கள் எடுத்த முடிவை எதிர்த்தும் கேப்டன் திலக் வர்மா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்தத் தொடர் சர்ச்சைகளாலும், சூப்பர் ஓவரில் 19 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் போனதாலும் ஏற்பட்ட ஏமாற்றமே, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் இத்தகைய ஆக்ரோஷமான வெளிப்பாட்டிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
