கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி செலுத்திக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு, சுமா என்ற பெண்ணுடன் திருமணமாகி குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில், சுமாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த டோம்பர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் ரவிக்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட சுமாவும், அவரது கள்ளக்காதலன் டோம்பரும் சேர்ந்து ஒரு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
சம்பவத்தன்று இரவு, திட்டமிட்டபடி ரவிக்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுமா தனது கள்ளக்காதலனை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து, ரவிக்குமார் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரது உடலில் வீரியமிக்க விஷ ஊசியைச் செலுத்தியுள்ளனர். இதில் ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலையில் ரவிக்குமார் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி சுமா நாடகமாடியுள்ளார். எனினும், ரவிக்குமாரின் மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ததில் அவர் விஷம் செலுத்திக் கொல்லப்பட்டது அம்பலமானது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், மனைவியும் அவரது கள்ளக்காதலனும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
