பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும், கடலில் விபத்துக்குள்ளான மற்றொரு விமானத்தைத் தேடும் பணியில்  ஈடுபட்டிருந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் பணியின் போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் நடுவானில் பயங்கரமாக மோதி நொறுங்கின. மோதிய வேகத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களும் தீப்பற்றி எரிந்தவாறே கீழே விழுந்ததால், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தப்பிக்க வழியின்றி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர்.

இக்கொடூர விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கிய பகுதிக்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்ற மீட்புக் குழுவினரே, இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.