மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் கடந்த ஆண்டு சாதி மறுப்பு காதல் காரணமாக சக்ஷாம் தாடே என்ற வாலிபர் கௌரவக் கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்குப் பின், காதலில் உறுதியாக இருந்த ஆஞ்சல் மாமித்வார் என்ற இளம்பெண், சக்ஷாமின் உடலுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிலேயே குடியேறினார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆஞ்சல் தனது புகுந்த வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலனின் சகோதரர் மீது மிகக் கடுமையான பாலியல் புகார்களைச் சுமத்தியுள்ளார். சக்ஷாமின் தம்பி தனக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவனது பார்வை தன் மீது தவறாக இருந்ததாகவும் ஆஞ்சல் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் மிகுந்த நம்பிக்கையுடன்தான் அந்த வீட்டிற்குள் மருமகளாகச் சென்றேன். ஆனால், சக்ஷாமின் தம்பி என்னிடம் தவறாக நடக்க முயன்றான். இதுகுறித்து அவனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் பலமுறை புகாரளித்தும் அவர்கள் என்னை நம்பவில்லை. இதனால் எதிர்காலத்தில் என் உயிருக்கோ, கற்புக்கோ ஆபத்து வரலாம் என்று அஞ்சி, போலீசாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியோடு வீட்டை விட்டு வெளியேறி தற்போது உறவினர் வீட்டில் தங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஞ்சலின் தந்தை மற்றும் சகோதரர்களால் சக்ஷாம் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது புகுந்த வீட்டினரால் ஆஞ்சல் வெளியேறியுள்ள விவகாரம் மகாராஷ்டிராவில் மீண்டும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
