மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், குடிகார கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதோடு மட்டுமில்லாமல், கழுத்தில் இரும்புச் சங்கிலியைப் பூட்டி வீட்டின் கம்பத்தோடு கட்டிவைத்து, உடம்பில் சுடு கம்பியால் சுட்டு சித்திரவதை செய்துள்ள நெஞ்சை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கில்சிப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சீபிபுரா கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மங்கைபாய் தன்வர் என்பவருக்கு, கடந்த ஜூன் 10 அன்று குடித்துவிட்டு வந்த கணவன் சர்தார் சிங் தன்வர் எந்தக் காரணமும் இல்லாமல் கடுமையான அடி-உதை கொடுத்துள்ளார். இந்த அராஜகத்தை எதிர்க்க துணிந்த மங்கைபாய், போலீசில் புகாரளிக்க நள்ளிரவில் காடு, மேடெல்லாம் கடந்து கில்சிப்பூர் நோக்கி நடந்தே சென்றபோது, வழியிலேயே அவரை மறித்த கணவன் மீண்டும் தாக்கி வீட்டுக்குக் கடத்தி வந்துள்ளான்.
“இனி எப்படி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் என் மீது புகார் கொடுக்கிறாய் என்று பார்க்கிறேன்” எனக் சவால் விட்டபடி, மனைவியின் கழுத்தில் இரும்புச் சங்கிலியைப் போட்டு கம்பத்தோடு பூட்டியதுடன், கேஸ் அடுப்பில் இரும்புச் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி அவரது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொடூரமாகச் சுட்டு, 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக் கைதியாக அடைத்து வைத்துள்ளான்.
பின்னர், பஞ்சாயத்தைக் கூட்டி மனைவியை மிரட்டுவதற்காகக் கணவன் வெளியே சென்ற சமயத்தில், மங்கைபாய் அங்கிருந்த ஒரு பாறாங்கல்லை எடுத்து சங்கிலியின் பூட்டை அதிரடியாக உடைத்து, கழுத்தில் சங்கிலி தொங்கிய நிலையிலேயே 6 கிலோமீட்டர் தூரம் பசியோடு நடந்தே சென்று காவல் நிலையத்தை அடைந்துள்ளார்.
இரத்தக் காயங்களுடன் வந்த அந்தப் பெண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரது சங்கிலியை அகற்றி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதோடு, கிராமத்திற்கு விரைந்து சென்று அந்த அரக்கக் கணவன் சர்தார் சிங்கை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
