கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் காவ்யா என்ற தனியார் நிறுவன ஊழியர், ஒருநாள் தனது பயணத்திற்காக மஞ்சுநாத் என்ற ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவில் ஏறியுள்ளார். பயணம் முடிந்து அவரிடம் கட்டணமாக 200 ரூபாய் கொடுத்த காவ்யா, சாதாரணமாக “ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

மேலும் அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் மிகவும் நேர்மையாக, செலவுகள் எல்லாம் போக ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்ட காவ்யா உடனடியாகத் தன் மனதில் கணக்குப்போட்டுப் பார்த்தார். ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் என்றால் மாதத்திற்குச் சரியாக 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

இதனால் இன்று பெரிய நிறுவனங்களில் இரவு பகலாக உழைத்து, மேலதிகாரிகளின் வசவுகளை வாங்கும் பலருக்குக் கூட இவ்வளவு சம்பளம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர், மஞ்சுநாத்தின் கடின உழைப்பையும் சுயசார்பையும் கண்டு வியந்துபோனார்.

இந்நிலையில் ஆட்டோவை விட்டு இறங்கிய அடுத்த கணமே தன் தாய்க்குத் தொலைபேசியில் அழைத்து, “அம்மா, எனக்கான கணவரை நான் கண்டுபிடித்துவிட்டேன், இனி எனக்கு மாப்பிள்ளை தேட வேண்டாம்!” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். எளிய ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையும் உழைப்பும் ஒரு பெண்ணின் திருமண முடிவை மாற்றிய இந்த சுவாரசியமான கதை சமூக வலைத்தளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது.