கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா, கந்தவார கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த 5 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்துத் தங்களது காதல் திருமணத்தை முறைப்படி நடத்திக் கொண்டனர். தங்களுக்குப் பெண் வீட்டாரால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சிய புதுமணத் தம்பதியினர், பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரையும் போலீசார் அழைத்திருந்த நிலையில், காவல் நிலைய வளாகத்திலேயே சைத்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சைத்ராவைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்துச் சென்று, அவரது கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, அதிர்ச்சியடைந்த மணமகன் அருண்குமார் தனது மனைவியை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள், சைத்ராவை மீட்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது, “நான் எனது கணவர் அருண்குமாருடன் தான் வாழ்வேன்” என்று சைத்ரா பெற்றோரின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் உறுதியுடன் தெரிவித்தார். மகளின் துணிச்சலான முடிவை ஏற்றுக் கொண்ட போலீசார், சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் நிலைய வளாகத்திலேயே காதலர்கள் இருவருக்கும் முறைப்படி இரண்டாவது முறையாகத் திருமணம் செய்து வைத்தனர். மணமக்களை வாழ்த்திய போலீசார், அவர்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
