அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட், 2019-ம் ஆண்டு விவாகரத்துக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய கொடையாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் சுமார் 26.4 பில்லியன் டாலர்களைப் பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். குறிப்பாக, 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 7.2 பில்லியன் டாலர்களை அவர் வழங்கியுள்ளார், இது ஒரு தனிநபர் ஓராண்டில் வழங்கிய மிகப்பெரிய தொகையாகும்.

அமேசான் நிறுவனத்தில் தனக்குக் கிடைத்த பங்குகளில் 75 சதவீதத்திற்கும் மேல் அவர் தானமாக அளித்திருந்தாலும், இன்னும் சுமார் 33.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அவர் நீடிக்கிறார்.

மெக்கன்சி ஸ்காட்டின் தாராள மனப்பான்மைக்கு மிக முக்கிய உதாரணம், வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்த ‘ஹிஸ்டாரிக்கலி பிளாக் காலேஜஸ் அண்ட் யுனிவர்சிட்டிஸ்’ எனப்படும் கல்வி நிறுவனங்களுக்கு அவர் வழங்கி வரும் நிதியுதவியாகும். எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி நிதியை வழங்குவதே இவரது பாணியாகும்; இதன் மூலம் அந்தந்த நிறுவனங்களே தங்கள் தேவைக்கேற்ப நிதியைச் சிறந்த முறையில் செலவிட முடியும்.

‘கிவிங் பிளட்ஜ்’ என்ற உறுதிமொழியின் கீழ் தனது வாழ்நாளில் பாதி சொத்துக்களைத் தானம் செய்யப்போவதாக அறிவித்துள்ள அவர், இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளார்.

இவரது இந்தச் சிறப்பான மற்றும் நேர்மையான சமூகப் பணிக்காக, அவர் ப்ஸின் ஐகோனோக்ளாஸ்ட் 50′ பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.