சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்து போன விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் அனல் பறக்கும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஏழை எளிய மக்களின் உயிர்கள் மீது ஆளும் தவெக அரசுக்கு ஏன் இத்தனை அலட்சியம் என்று மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தினசரி ஏதேதோ ஆய்வு செய்வதாக வெறும் “ரீல்ஸ்” எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும், அமைச்சர்களும் அதிகாரிகளும் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் விளம்பர நாடகங்களையும் பித்தலாட்டங்களையும் அரங்கேற்றி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

மாயாஜால வார்த்தைகளால் மக்களை மயக்குவதில் திமுகவை விட தவெக ஒருபடி மேலே போய்விட்டது என்று விமர்சித்த நயினார் நாகேந்திரன், “போதும் ஜோசப் விஜய்யே, இனியாவது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யப் பாருங்கள்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.