தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று முக்கிய செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டிருப்பதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனைகள், தொடரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போன்ற ஆளும் தவெக அரசின் அவலங்களை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் தான், எதேச்சாதிகார போக்குடன் இந்த 3 சேனல்களும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாகத் தனது அரசின் தோல்விகளை மறைத்துவிடலாம் என தவெக அரசு நினைப்பதாகவும், இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திர பறிப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார்.
அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களில் எந்த உண்மையும் இல்லை எனக் குறிப்பிட்ட எல்.முருகன், கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது என்பதை தவெக அரசு புரிந்து கொண்டு, உடனடியாக அந்த 3 சேனல்களின் ஒளிபரப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
