தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் அரசியல் சூழலை முற்றிலும் ஒரு புதிய திசைக்குக் கொண்டு சென்றுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்று அரசியல் முழக்கத்துடன் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று வந்த நாம் தமிழர் கட்சியும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்தத் தேர்தலில் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்று மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்த அக்கட்சி, இந்த முறை தனது வாக்கு சதவீதத்தில் பாதியை இழந்து வெறும் நான்கு சதவீதத்திற்குள் சுருங்கியுள்ளது.அதைவிடப் பெரும் அதிர்ச்சியாக, காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் வெறும் முப்பதாயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்தத் தோல்வியானது, மேடைப் பேச்சுகளையும் உணர்ச்சிமிகு முழக்கங்களையும் தாண்டி, அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் களப்பணிகளைச் செய்வதிலும் அக்கட்சி தவறிவிட்டதை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட எழுச்சி பார்க்கப்படுகிறது. திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியை நோக்கி வந்த இளைஞர்களும், முதல்முறை வாக்காளர்களும் தற்பொழுது அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய வலுவான மாற்றுச் சக்தியாக விஜய்யைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதே வேளையில், தங்களது கூட்டணியைத் தக்கவைத்துள்ள திமுக ஒருபுறமும், பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை மறுபுறமும் அரசியல் விவாதங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர். இத்தகைய புதிய முப்பரிமாண அரசியல் போட்டியில் சீமானின் குரல் முற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தீவிரஆலோசனையில் ஈடுபட்டுள்ள அவர், தற்போதைய புதிய அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தனது பழைய பாணியை மாற்றியமைக்காவிட்டால் கட்சியின் தனித்துவத்தை இழக்க நேரிடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால், சீமான் தனது வியூகங்களை மாற்றி மீண்டும் எழுச்சி பெறுவாரா அல்லது தேக்க நிலையைச் சந்திப்பாரா என்பது அவரது அடுத்தகட்ட நகர்வுகளிலேயே அடங்கியுள்ளது.
