உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையோரங்களிலும், காலி மனைகளிலும் எந்தவித பாதுகாப்போ, கண்காணிப்போ இன்றி கஞ்சா செடிகள் காடு போல செழித்து வளர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வழியாகச் சென்ற வெளிநாட்டுப் பெண் பயணி ஒருவர், இந்த அடர்ந்த கஞ்சா காட்டைப் பார்த்து வியப்படைந்து அதனை வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் இப்படி ஒரு காட்சியைத் தான் எதிர்பார்க்கவே இல்லை என ஆச்சரியத்துடன் கூறும் அந்தப் பெண், கேமராவைப் பார்த்து புன்னகைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உ.பி-யின் பல கிராமப்புறப் பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த பாங் செடிகள் தானாகவே முளைத்து, மனித உயரத்திற்கும் மேலாக வளர்ந்து நிற்பது அங்கு வழக்கமான ஒன்றுதான் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
View this post on Instagram
இந்தியாவில் சிவராத்திரி, ஹோலி போன்ற பண்டிகைகளின் போது இந்த பாங் (கஞ்சா) செடிக்கு ஆன்மீக மற்றும் ஆயுர்வேத முக்கியத்துவம் இருந்தாலும், இதனை போதைக்காகப் பயன்படுத்துவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த காட்டு கஞ்சா செடிகளில் போதை தரும் ‘THC’ காரணியின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும், மக்கள் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்தாததாலும் இவை எவ்வித தடையுமின்றி வளர்ந்து வருகின்றன.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “உ.பி-யில் கஞ்சா கூட இலவசமாக முளைக்கிறது, அரசு இதற்கு வரி விதிக்க வேண்டும்” என்றும், “இதைப் பார்த்து வெளிநாட்டினர் இந்தியாவில் எல்லாமே இலவசம் என்று நினைப்பார்கள்” என்றும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இமயமலை மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் இந்த செடிகள் இயற்கையாகவே வளர்வது வழக்கம் என்பதால், இதன் வர்த்தகத்தைக் கண்காணிப்பது கடினம் என்றும், பெரிய அளவில் கடத்தல் நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
