கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டுப்போர் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பழிவாங்கும் விதமாக, வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி மரண தாக்குதல் நடத்தியது.

இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அமெரிக்கா தனது தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தியதுடன், இஸ்ரேலையும் அமைதி காக்க வலியுறுத்தியது. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் ஓமன் நாடுகளுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்த சூழலிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளன.

இந்தப் போரில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தற்பொழுது பயங்கரப் பதிலடி கொடுத்து வருவதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. வளைகுடா போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய மெகா திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ஆழ்கடல் ஆய்வுதிட்டமான ‘சமுத்ர மந்தன்’ திட்டத்தின் கீழ், அந்தமான் தீவுகளின் கிழக்கு கடற்கரையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம்-3 பகுதியில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இங்கு 1,900 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணறுகளில் எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதிலிருந்து அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்குத் தடையின்றி எரிபொருளை எடுக்க முடியும் எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை ஒரே அடியாக 30% வரை உயர்த்தப்போகும் இந்த அதிநவீன ஆழ்கடல் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லாததால்,இதற்காக 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு தற்பொழுது அதிரடி அனுமதி வழங்கியுள்ளது.