ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சிராவா நகரில், ‘ஜம்ஜம் கலெக்ஷன்’ என்ற ஆடை விற்பனையகத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையைப் படம்பிடித்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை தனது கணவருடன் துணிகள் வாங்க வந்த பெண் ஒருவர், சோதனை அறைக்குச் சென்றபோது அங்கிருந்த ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து தனது கைபேசி மூலம் ரகசியமாகத் தன்னை வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அப்பெண்ணும் அவரது கணவரும் உள்ளூர் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஷாருக்கான் என்ற இளைஞரைக் கைது செய்துள்ளனர். மேலும், அந்த ஆடை விற்பனையகத்தை மூடி அதற்குச் சீல் வைத்த போலீசார், குற்றம் சாட்டப்பட்டவரின் கைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சுல்தானா காவல் நிலைய அதிகாரி ரவீந்திரா தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, பறிமுதல் செய்யப்பட்ட கைபேசியைத் தொழில்நுட்ப மற்றும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.