சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நவீன் என்ற இளைஞர் இறந்துவிட்டதாகக் கருதி, காவல் துறையினர் அவரைச் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த வாலிபரின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக (Post-mortem) மார்ச்சுவரிக்கு எடுத்துச் சென்ற போதுதான், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற மிராக்கிளான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரைச் சரியாகப் பரிசோதிக்காமல், அவர் இறந்துவிட்டதாக முடிவெடுத்து மார்ச்சுவரிக்கு அனுப்பிய மருத்துவர்களின் இந்த அலட்சியமான செயல்பாட்டைக் கண்டு நவீனின் உறவினர்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

“உயிரோடு இருக்கும் ஒருவரை எப்படி நீங்கள் சவக்கிடங்குக்கு அனுப்பலாம்?” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பிய நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த அரசு மருத்துவமனையை அதிரடியாக முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.

மருத்துவமனை வளாகத்தையே அதிர வைத்த இந்தத் திடீர் போராட்டத்தால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர்.