ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின்போது, ராணுவ அதிகாரி ஒருவர் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக வீரமரணமடைந்தார். ரஜோரி மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவத்தின் சார்பில் ‘ஆபரேஷன் ஷேராவாலி’ என்ற பெயரில் பிரம்மாண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த ஆபரேஷனில் பங்கேற்று, நள்ளிரவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் வீரர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த லெப்டினன்ட் தரம்வீர் சிங் சிசோடியா என்ற ராணுவ அதிகாரி, எதிர்பாராதவிதமாக கால் தவறி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் தரம்வீர் சிங் சிசோடியா, அண்மைக்காலமாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத எதிர்ப்புப் படையில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த உடனே சக ராணுவ வீரர்கள் விரைந்து செயல்பட்டு, பள்ளத்தாக்கில் இருந்து அவரது உடலை மீட்டனர். வீரமரணமடைந்த ராணுவ அதிகாரியின் உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் சக வீரர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இத்தகைய சோகமான விபத்து நேரிட்ட போதிலும், எல்லையில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான ‘ஆபரேஷன் ஷேராவாலி’ தேடுதல் வேட்டை எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
