கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகளையே தாயும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாவணகெரே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருடன் 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பிரியங்காவிற்கு, 17 வயதில் ஒரு மகளும், 6 வயதில் வெண்ணிலா என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், பிரியங்காவிற்கு அவரது கல்லூரி கால நண்பரான மோகன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கணவர் பிரவீனுக்குத் தெரியவந்து அவர் கண்டித்தபோதும், பிரியங்கா கள்ளக்காதலை கைவிடவில்லை. மாறாக, கணவரிடம் விவாகரத்து கேட்டு தொல்லை கொடுத்ததுடன், தனது 6 வயது மகள் வெண்ணிலாவை மட்டும் அழைத்துக் கொண்டு கள்ளக்காதலன் மோகனுடன் தனியாகச் சென்று வாழத் தொடங்கியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி மகள் வெண்ணிலா திடீரென இறந்துவிட்டதாக பிரவீனிடம் பிரியங்கா கூறியுள்ளார். மகளுக்கு ஹோட்டலில் பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு ஏசி காரில் தூங்க வைத்தபோது அவள் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். ஆனால், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட பிரவீன், மகள் வெண்ணிலாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்று வெளிநாட்டில் டாக்டராக இருக்கும் தனது உறவினருக்கு அனுப்பியுள்ளார். அதை ஆய்வு செய்த அந்த டாக்டர், சிறுமி பிரியாணி சாப்பிட்டு இறக்கவில்லை, அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்ற அதிரடி உண்மையைப் போட்டுடைத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் 3 மாதங்களுக்குப் பிறகு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், மகள் கருப்பாக இருந்ததாலும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் பிரியங்காவும் அவளது காதலன் மோகனும் சேர்ந்து குழந்தையைக் கொலை செய்தது அம்பலமானது. தற்போது காதலன் மோகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கொடூரத் தாய் பிரியங்காவை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
