பல ஆண்டுகள் தொடர்ச்சியான காதல் துரோகங்களாலும் முறிந்த உறவுகளாலும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 38 வயது மாடல் போனி லாக்கெட், தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து 2023-ல் திருமணம் செய்துகொண்ட கணவர், வெறும் ஒன்பது மாதங்களிலேயே தமக்குத் துரோகம் செய்ததை அறிந்து போனி அந்த உறவை முறித்துக் கொண்டார். அதன் பிறகு ஏற்பட்ட புதிய காதலும் தோல்வியில் முடிவடைந்ததால், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றார்.

பின்னர் நண்பர்களின் ஆதரவு, முறையான மனநல சிகிச்சை மற்றும் செல்லப் பிராணியின் அன்பு ஆகியவற்றால் மீண்டு வந்த அவர், மகிழ்ச்சியாக வாழ மற்றொருவரைச் சார்ந்திருக்கத் தேவையில்லை என்பதையும், சுய அன்பே முக்கியம் என்பதையும் உணர்ந்தார்.

இந்த புதிய தொடக்கத்தைக் கொண்டாட நினைத்த போனி, சமூக வலைதளத்தில் பார்த்த சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் வைர மோதிரத்தைத் தனக்காகவே வாங்கினார்.

பின்னர், தமக்கு வலியைத் தந்த பழைய திருமண ஆடையும் வைர மோதிரமும் சூழ, இபிசா தீவின் அழகான கடற்கரையில் வாழ்நாள் முழுவதும் தன்னைத் தானே நேசிக்கப் போவதாக உறுதிமொழி எடுத்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தனித்துவமான கடற்கரைத் திருமண விழாவிற்காக அவர் ஒட்டுமொத்தமாக சுமார் 48 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளார்.

கடந்த கால வேதனையான நினைவுகளை ஒரு நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் விஷயமாக மாற்றுவதே இந்தத் திருமணத்தின் நோக்கம் என்றும், தன்னைத் தான் நேசிக்கக் கற்றுக்கொண்டால் எந்த சவாலையும் எதிர்கொள்ளலாம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.